மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: தொழில் நுட்ப பூங்காவுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி சென்னை, கோவை தொடர்ந்து திருச்சியில் தொழில் நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யபட்டது.

திருச்சி அருகே உள்ள நவல்பட்டில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 9 நிறுவனங்களுக்கு தொழில் நுட்ப பூங்காவிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை மாலை 4.30 மணிக்கு நவல்பட்டில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செல்வராஜ், பூங்கோதை, மத்திய மந்திரி நெப்போலியன் முன்னிலை வகிக்கிறார்கள்.

துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதோடு திருவெறும்பூர் புதிய தாலுகாவையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

முன்னதாக நாளை (22-ந்தேதி) காலை 11 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் பொய்யாமொழியின் மகன் பொ.உதயநிதி-அஞ்சுகம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி கரூர்-பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருப்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வருகிறார். அவருக்கு பெட்டவாய்த்தலையில் திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இன்று இரவு சங்கம் ஓட்டலில் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். அதன் பிறகு நாளை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

திருச்சிக்கு மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட வளைவுகள் , டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. திருச்சி முழுவதும் சாலையோரங்களில் தி.மு.க. கொடிகள், அலங்கரிக் கப்பட்டு உள்ளன.

நவல்பட்டில் விழா நடக்கும் இடம் அருகே 1000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 750 போலீசார் பாதுகாப்பு பணியில்.

Source: மாலை நாளிதழ்

One Response to “மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: தொழில் நுட்ப பூங்காவுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்”

  1. Shalini Says:

    Very useful blog which gives lot of information.


Leave a comment